செய்திகள்

தேவர் தங்க கவசம் விவகாரம்: வங்கி மேலாளருக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் விளக்க கடிதம்

Published On 2017-11-29 07:14 GMT   |   Update On 2017-11-29 07:15 GMT
மதுரை அண்ணாநகரில் தேவர் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கி கிளையின் மேலாளருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கையெழுத்திட்ட விளக்க கடிதம் இன்று அளிக்கப்பட்டது.
மதுரை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவருக்கு அணிவிப்பதற்காக அ.தி.மு.க. சார்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்த கவசம் வருடந்தோறும் தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்படுவது வழக்கம்.

விழா முடிந்த பின் தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் வைக்கப்படும். இதனை நிர்வகிக்கும் பொறுப்பு அ.தி.மு.க. பொருளாளருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. இந்த ஆண்டு தங்க கவசத்தைப் பெற எடப்பாடி தரப்பினருக்கும், தினகரன் தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வங்கி நிர்வாகம் தங்க கவசத்தை மதுரை மாவட்ட கலெக்டர் பொறுப்பில் வழங்கியது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணியே உண்மையான அ.தி.மு.க. என்றும், அ.தி.மு.க. பெயரையும், சின்னங்களையும் இவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இதை மேற்கொள்காட்டி மதுரை அண்ணாநகரில் தங்க கவசம் வைக்கப்பட்டுள்ள வங்கி கிளையின் மேலாளருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்ட விளக்க கடிதம் இன்று அளிக்கப்பட்டது.

அதில் உண்மையான அ.தி.மு.க. நாங்கள் தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அ.தி.மு.க. சார்பான நிதி பரிவர்த்தனைகளையும், தேவர் தங்க கவசத்தினை நிர்வகிக்கும் பொறுப்பையும் அ.தி.மு.க. பொருளாளரே கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் அ.தி.மு.க தலைமை கழகம் சார்பில் சென்னையில் உள்ள வங்கிகளுக்கும் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News