செய்திகள்

அரியலூர் அருகே வயலில் நாற்று நட்டபோது மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

Published On 2017-11-28 03:05 IST   |   Update On 2017-11-28 03:05:00 IST
அரியலூர் அருகே வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:

அரியலூர் அருகே வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கருப்பூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பெண்கள் 9 பேர் நேற்று திருமானூர் அருகே கீழகாவட்டாங்குறிச்சியில் உள்ள ஒருவரது வயலில் நேற்று மதியம் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வேளையில் அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது மின்னல் தாக்கியதில் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த மணி மனைவி உண்ணாமலை (வயது 48), செல்வராஜ் மனைவி செந்தமிழ்ச்செல்வி (40), அண்ணாதுரை மனைவி அஞ்சலை (50) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அருகில் இருந்த பொன்னரும்பு, அன்னக்கொடி, செல்வி ஆகியோர் காயமடைந்தனர்.

கீழப்பழுவூர் மற்றும் திருமானூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலூர் மாவட்டம், கூடலை ஆத்தூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது50). இவர் திருமானூர் அருகே உள்ள விளாங்குளம் கிராமத்தில் வயலில் நாற்று நடுவதற்கு வந்திருந்தார். நேற்று பகல் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அவர் ஒரு மரத்தில் ஒதுங்கி நின்றார்.

அப்போது மின்னல் தாக்கியதில் கண்ணுசாமி பரிதாபமாக இறந்தார். 

Similar News