செய்திகள்
வேதாரண்யம் அருகே மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி
வேதாரண்யம் அருகே மரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கரியப்பாட்டினம் காவல் சரகம், கத்தரிப்புலம் கீழக்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கருணாகரன் (வயது19). இவர் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சியாகாத நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.
இவர் மாமரம் குத்தகை எடுத்த வியாபாரிகளுக்கு மாங்காய் பறித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டருகே உள்ள வேப்பமரத்தில் தனது வீட்டில் உள்ள ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக ஏறியுள்ளார். 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாகரன் உடலை கைப்பற்றி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.