செய்திகள்
சட்டக்கல்லூரி மாணவிநந்தினி தனது தந்தையுடன் நெல்லைகலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது

Published On 2017-10-25 05:50 GMT   |   Update On 2017-10-25 05:50 GMT
கந்துவட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தந்தையுடன் கைதாகியுள்ளார்.
நெல்லை:

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், 2 குழந்தைகளும் பலியானார்கள்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்கள் மற்றும் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவர் கந்து வட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார்.

அவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு கோரிக்கை அட்டையுடன் தரையில் அமர்ந்தார். மாணவி நந்தியினியுடன் அவரது தந்தையும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை, தேவைப்பட்டால் புகார் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றனர்.


ஆனால் மாணவி நந்தினி தொடர்ந்து அந்த இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனால் போலீசார் மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும் கைது செய்தனர்.

ஏற்கனவே மாணவி நந்தினி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது கந்துவட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்று தனது தந்தையுடன் கைதாகியுள்ளார்.
Tags:    

Similar News