செய்திகள்

கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு 40 மூட்டை சாதம் - மண் பானைகளில் சமையல்

Published On 2017-10-16 16:15 IST   |   Update On 2017-10-16 16:15:00 IST
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோவில் திருவிழாவில் 40 மூட்டை சாதம் மண் பானைகளில் சமைக்கப்பட்டது.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி கிராமத்தை அடுத்த ஓலப்பாளையம் உள்ளது. இங்கு பழமையான மாயவர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் மாயவர் திருவிழா சிறப்பாக நடக்கும். அதன்படி மாயவர் திருவிழா நடந்தது.

விழாவின் சிறப்பம்சமாக மண் பானைகளில் சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவில் பின்புறம் உள்ள சமையல் கொட்டகையில் மேல் சட்டை அணியாமல் காவி வேட்டியுடன் நெற்றியில் நாமமிட்டு மண் பானைகளில் சோறு சமைத்து வடித்தனர். இப்படி 40 மூட்டை சாதம் மண் பானைகளில் சமைக்கப்பட்டது.

இதே போல் மண் பானைகளிலேயே சாம்பார், ரசம் ஆகியவை தயார் செய்யப்பட்டது. இளைஞர்கள் செய்த சமையலுக்காக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உதவியாக இருந்து காய்கறிகளை நறுக்கி கொடுத்தனர்.

அன்னதானத்துக்கு முன்பு விரதம் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பெண்களுக்கு மடி சாதம் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக மாடுகள் மற்றும் கன்றுகளை கோவில் பூசாரியிடம் வழங்கினர்.

Similar News