அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பேன்: தத்தெடுப்பு கிராம மக்களிடம் அன்புமணி உறுதி
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள மோட்டாங்குறிச்சி ஊராட்சியை தர்மபுரி எம்.பி. அன்புமணிராமதாஸ் சான் சத் ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டம் மூலம் தத்தெடுத்துள்ளார். இந்த கிராம பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வரும் மூன்று மாதத்தில் முடித்து கொடுப்பதாக அவர் உறுதி கூறினார்.
அவர் பேசும் போது, மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு ஒவ்வொரு ராஜ்ஜிய சபா உறுப்பினர்களும் ஒவ்வொரு பஞ்சாயத்தைத் தத்தெடுக்க வேண்டும் என கூறியதால் அந்த கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவும் மாதிரி பஞ்சாயத்தாக மாற்றிட கூடுதல் நிதி ஒதுக்கி தரும் என்று நினைத்து எனது தொகுதிக்குட்பட்ட மோட்டாங்குறிச்சி பஞ்சாயத்தை தத்தெடுத்தேன். ஆனால் எம்பி நிதியை தவிர ஒரு பைசா கூட கூடுதலாக கொடுக்கவில்லை.
மேலும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை. தர்மபுரி மாவட்ட எம்.பி.யான என்னுடைய அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த மாவட்டத்தின் கலெக்டர் புறக்கனித்து வருகின்றார். இதனால் இந்த மாவட்டத்தின் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் எதிர்ப்பிலும் என்னை முழுமையாக ஆதரித்து வெற்றி பெறவைத்த பஞ்சாயத்தில் உள்ள அனைத்து அடிப்படை தேவைகளும் மூன்று மாதத்திற்குள்ளாக முடித்து கொடுப்பேன் என்று பேசினார்.