செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே மரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்

Published On 2017-10-13 10:28 GMT   |   Update On 2017-10-13 10:28 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே பாசனத்துக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி மரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வேளாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 61). விவசாயி.

இவர் நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வேப்ப மரத்தில் திடீரென்று ஏறினார்.

அவரது கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வைத்திருந்தார். மரத்தின் மேல் ஏறி நின்ற அவர், நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இது குறித்த தகவல் காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மரத்தில் ஏறி நின்ற இந்திரஜித்தை கீழே இறங்குமாறு கூறினர்.

அப்போது இந்திரஜித், “விவசாய பாசனத்துக்காக கல்லணை மற்றும் கீழணையில் இருந்து உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்போதுதான் கீழே இறங்குவேன்” என்றார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன், “பாசனத்துக்காக இன்னும் 3 நாட்களில் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்” என்று இந்திரஜித்திடம் கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட இந்திரஜித் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். அப்போது போலீசார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News