செய்திகள்

உளுந்தூர்பேட்டை, விருத்தாசலத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

Published On 2017-10-06 19:20 IST   |   Update On 2017-10-06 19:20:00 IST
உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாசலத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை விடிய, விடிய கொட்டியது.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால் இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது.

உளுந்தூர்பேட்டை, காட்டுநெமிலி, பு.கிள்ளனூர், உளுந்தாண்டவர் கோவில், ஆசனூர் போன்ற பகுதிகளில் இரவு 10 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது.

இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது.

உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் அங்குள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு விருத்தாசலம், கருவேப்பலங்குறிச்சி, ஆலடி, மங்களம்பேட்டை, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், பெண்ணாடம், திட்டக்குடி போன்ற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் பெருகி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கலந்து ஓடுகிறது. கடலூர் மற்றும் சிதம்பரம், பண்ருட்டி பகுதியில் லேசான தூறல் மழை பெய்தது. இன்று காலையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.

Similar News