செய்திகள்

கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 8 பேர் பலி

Published On 2017-10-02 19:12 IST   |   Update On 2017-10-02 19:12:00 IST
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் எட்டு பேர் பரிதாபமாக உயிரிந்தனர். 31 பேர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, உறையூர், ஸ்ரீமுஷ்ணம், கானூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் அங்கம்மாள் (40). இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். பண்ருட்டி லிங்க் ரோட்டில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவரின் மகன் ஹரிஷ் (2) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தான்.

மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்கம்மாள், ஹரிஷ் ஆகிய 2 பேர் இறந்துள்ளனர். கடந்த 28-ந் தேதி கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் 6 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதத்தில் விழுப்புரம் அருகே கல்பட்டை சேர்ந்த சின்னப்பன் ராபர்ட் (35), மரக்காணம் மந்தவாய் சுரேஷ் (40), சின்னசேலம் காந்திநகர் விஷ்ணுபிரியன் (6), சங்கராபும் அமுதா (35) ஆகிய 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர், நத்தம்மேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் நிவேதா (5) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாள்.

கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணன் (34) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News