செய்திகள்

சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Published On 2017-09-30 06:40 GMT   |   Update On 2017-09-30 06:40 GMT
சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை:

சிவாஜிகணேசன் மணி மண்டபம் வருகிற 1-ந்தேதி அவருடைய பிறந்த நாளில் திறக்கப்படுகிறது.

முதலில் இந்த மணி மண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர் கடம்பூர் ராஜு திறப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சிவாஜி குடும்பத்தினர் உள்பட பலதரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா ஆணையின்படி, சென்னையில் நடிகர் திலகம், செவாலியர் சிவாஜி கணேசனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் நிலையில் இருந்தது.

இதற்கிடையே 1.10.2017 அன்று நடிகர் திலகம், செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் வருவதால் மணிமண்டபத்தின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்க வேண்டுமென்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றன.

அதனடிப்படையில் மணி மண்டபத்தின் பணிகளை விரைந்து 1.10.2017-க்குள் முடிக்குமாறும், நடிகர் திலகம் பிறந்த நாளான 1.10.2017 அன்றே மணிமண்டபத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைக்க ஆணையிட்டிருந்தேன்.

நானே மணிமண்டபத்தை திறக்கலாம் என்று ஆவலாகவும், ஆர்வத்துடனும் இருந்தேன். இருப்பினும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையில் நான் வெளியூரில் இருப்பதால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளன்று மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதேபோல், துணை முதலமைச்சரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்ச்சிகளின் காரணமாக இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.

நான் ஆரம்ப காலம் முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரில் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அவரது நடிப்பாற்றலுக்கு இணை அவரேதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நடிகர் திலகம் கலைத் துறைக்கு ஆற்றிய பணியை நான்மட்டுமன்றி, உலகமே பாராட்டுவதை நான் இந்நேரத்தில் நினைவு கூர விரும்புகிறேன்.

அம்மா, நடிகர் திலகத்தை பாராட்டியதை இந்த நேரத்தில் நினைவு கூர விரும்புகிறேன்.

எனவே செவாலியர் சிவாஜி கணேசன் குடும்பத்தினரின் வேண்டுகோளின்படியும், கலைத் துறையினரின் கோரிக்கைகளின்படியும், 1.10.2017 அன்று நடிகர்திலம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தமிழக அரசின் சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார்.

அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமை வகிப்பார். அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகிப்பார் என தெரிவித்துக்கொள்கிறேன்.

விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் பொதுப் பணித்துறை இணைந்து உடனடியாக மேற்கொள்ள ஆணையிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News