செய்திகள்

விருத்தாசலத்தில் மழைநீர் வயல்களில் புகுந்ததால் விவசாயிகள் சாலை மறியல்

Published On 2017-09-26 18:37 IST   |   Update On 2017-09-26 18:37:00 IST
விருத்தாசலத்தில் வயல்களில் மழைநீர் புகுந்து இருப்பதை கண்டு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் து.கீழனூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் என்.எல்.சி. 2-வது சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு தோண்டப்படும் மணல்கள் அந்த பகுதிகளில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக அந்த மணல் மேடு அமைந்துள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் மணல்மேடு கரைந்து விவசாய நிலங்களில் படிந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில் நேற்று மதியம் விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் மணல்மேடு கரைந்து அங்குள்ள வாய்க்காலை மூழ்கடித்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் ஓடி அங்குள்ள வயல்களில் நிரம்பி வடிந்தது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இன்று காலை வயல்களுக்கு சென்ற விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இன்று காலை 7.40 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருத்தாசலம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் எங்கள் வயல்களில் பயிரிட்டிருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. என்.எல்.சி.சுரங்க மண் வயல்களில் படிந்துள்ளதால் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு என்.எல்.சி.அதிகாரிகள் வந்து நஷ்ட ஈடு வழங்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமுடியாது என்று கூறினர். இதனால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சாலைமறியலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் திடீரென்று தன் கையில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெய் எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களது மறியலை கைவிட்டு சாலையோரம் நின்றனர்.

விவசாயிகளின் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

Similar News