செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: ராமதாஸ் - திருமாவளவன் விடுதலை - பண்ருட்டி கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-09-26 18:16 IST   |   Update On 2017-09-26 18:16:00 IST
தேர்தல் விதிமீறல் வழக்கில் அரசு தரப்பில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் ராமதாஸ், திருமாவளவன் உள்பட 49 பேரை விடுதலை செய்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பண்ருட்டி குற்றவியியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் முன்னிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆகியோர் ஏற்கனவே ஆஜராகினர்.

தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. முடிவில் இரண்டு தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்ட நீதிபதி கணேஷ் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நீதிபதி கணேஷ் தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் குற்றசாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் இருந்து ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி உட்பட 49 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நெப்போலியன் மீது உள்ள வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளதால் அவருக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறினார்.

Similar News