செய்திகள்

செங்கல்பட்டில் டிரைவர் குத்திக் கொலை

Published On 2017-09-03 17:20 IST   |   Update On 2017-09-03 17:20:00 IST
செங்கல்பட்டில் டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு ஜெ.சி.கே. நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன் (37). டிரைவர். இவர் செங்கல்பட்டு டவுன் மேட்டுத் தெருவில் உள்ள நாராயணன் என்பவரின் காரை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு நாராயணன் வீட்டில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் முருகன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து இருந்தது. மேலும் அவரது கண்ணில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டு இருந்தன.

இது பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மதிவாணன் மற்றும் செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நாராயணன், அவரது மனைவி மற்றும் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

கொலையுண்ட முருகன், கார் உரிமையாளர் நாராயணனிடம் சுமார் 5 ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் முருகனை, நாராயணன் தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.

இந்த கொலைக்கு அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாராயணன் மீது ஏற்கனவே அ.தி.மு.க. பிரமுகர் மகனை கொலை செய்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News