எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி-ஓ.பி.எஸ் பங்கேற்பு
காஞ்சீபுரம்:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நாளை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அடுத்து அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார்.
பின்னர் காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை கீழ்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டினை திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.
பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நில அள வீட்டு அலுவலக கட்டிடத்தினை திறந்து வைக்கிறார்.
மாலை கிளாம்பாக்கம் பகுதியில் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தினை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர்கள் பெஞ்சமின், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் எம்.பி.க்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவுக்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், அ.தி.மு.க. காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம். ராசேந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மத்திய மாவட்டச் செயலாளர் திருக்குழுக்குன்றம் எஸ்.ஆறு முகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
முன்னதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாம்பரம், வண்டலூர், படப்பை வழியாக வரும் வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகின்றது.
படப்பையில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், மதனந்தபுரம் பழனி எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.