செய்திகள்

வெள்ளோடு அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2017-08-23 17:11 IST   |   Update On 2017-08-23 17:11:00 IST
வெள்ளோடு அருகே 6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). இவர் ஒரு தனியார் மில்லில் வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கும் திருப்பூரை சேர்ந்த பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. சங்கர் தன் தாய் தந்தையுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

தற்போது பவானி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது தாய்,தந்தை,மாமன் ஆகியோர் பார்த்து விட்டு அடுத்த மாதம் வளைகாப்பு செய்வது குறித்து பேசி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பவானி வீட்டில் தனியாக இருந்தார். அவர் வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சங்கர் நீண்ட நேரம் கதவு தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

சந்தேகம் அடைந்த சங்கர் கதவின் மேல் ஏறி பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கதறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். ஆனால் பவானி இறந்து விட்டார்.

இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்து. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி ஒரு ஆண்டே ஆன நிலையில் பவானி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது.

பவானி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளோடு பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Similar News