இந்தியாவில் முதல் முறையாக யானைகள் - வனவிலங்குகளை காப்பாற்ற நவீன ஆம்புலன்சு
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வறட்சியால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாயிப் பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் அண்மைகாலமாக அங்கேயே முகாமிட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
அப்போது யானைகளை விரட்டும்போது மனித விலங்குகள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. சில சூழ்நிலைகளில் கும்கியானைகளை வரவழைத்து கிராமத்துக்குள் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துறையினர் விரட்டுகின்றனர்.
மேலும் சேற்றில் சிக்கி தவிக்கும் விலங்குகள், நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தீவனம், தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள், சிறுத்தை, மான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடும்போது அதனை மீட்டு சிகிச்சை அளிக்க உரிய வாகன வசதியில்லாமல் விலங்குகள் உயிரிழந்து வருகிறது.
இது போன்ற வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு வனவிலங்குகள் மீட்புக்கான ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம், பதிவுஎண் பெறுவதற்கு சத்தியமங்கலம் வனச்சகர அலுவலகத்துக்கு வந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
ரூ. 20 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹாட்ராலிக் ஆம்புலன்ஸ் யானைக்காக இந்தியாவில் முதன்முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் யானைகள், கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் யானைகள் போன்ற அசாதரண நிகழ்வுகளை ஏற்படுத்தும் யானைகளை வாகனத்தில் ஏற்றி வேறு இடத்திற்கு மாற்றும்போது வனத்துறையினர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
யானைகள் ஏறாமல் அடம்பிடிக்கின்றன. இந்த ஆம்புலன்ஸில் யானைகளை ஏற்றுவது மிகவும் எளிது. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கிவைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம். இதில் 10 டன் வரை உள்ள யானைகளை ஏற்ற முடியும்.
மேல்தளத்தில் பாதுகாப்பு வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மருத்துவ வசதிகளும், அவசரகால வழியும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் கும்கி யானையை வைத்து கோவையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இவ்வாறு கூறினர்.
யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை’’ இந்த ஆம்புலன்ஸை அடர்ந்த வனத்தில் நிறுத்திவைத்து வனத்துறையினர் அதிலிருந்தபடியே விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். சில கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் வனத்துரையினர் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.