செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் பெண் கொலை: கணவர் கைது

Published On 2017-08-03 17:13 IST   |   Update On 2017-08-03 17:13:00 IST
காட்டுமன்னார்கோவிலில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வ.கொளக் குடியை சேர்ந்தவர் ராமர் (வயது 41). இவரது மனைவி அஞ்சாலாட்சி(36). இவர்கள் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அஞ்சலாட்சி லால் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளியின் பின்புறம் அஞ்சாலாட்சி வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் அஞ்சாலாட்சியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தகவல் அறிந்த காட்டு மன்னார்கோவில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு கத்தியோடு நின்றிருந்த ராமரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், ராமர் கூறியதாவது:-

எனக்கும் மனைவி அஞ்சாலாட்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. நாங்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் அஞ்சலாட்சியை தன்னுடன் சேர்ந்து வாழ பலமுறை அழைத்தேன். ஆனால் அஞ்சாலாட்சி அதை மறுத்தார். இதனால் மனைவி மீது சந்தேகமடைந்தேன். அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

நேற்று மதியம் பள்ளியின் பின்புறம் நின்ற அஞ்சாலாட்சியை யாரும் எதிர்பாராத வகையில் கத்தியால் வெட்டிக் கொன்றேன்.

இவ்வாறு அவர் போலீசில் கூறினார்.

இதையொட்டி ராமரை போலீசார் கைது செய்தனர்.

Similar News