செய்திகள்

பண்ருட்டி அருகே அக்கா- தங்கையை தாக்கி ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

Published On 2017-07-30 16:43 GMT   |   Update On 2017-07-30 16:43 GMT
பண்ருட்டி அருகே அக்காள்-தங்கையை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரியபகண்டை கிராமம் நவநீதம் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி வள்ளி (45). இவரது அக்காள் தமிழரசி (48). இவர் புதுவையில் வசித்து வருகிறார். பெரியபகண்டை கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

நேற்று இரவு அந்த பகுதியில் கர்ணமோட்சம் என்ற தெருக்கூத்து நடைபெற்றது. இதை பார்க்க வள்ளி- தமிழரசி ஆகியோர் சென்றிருந்தனர்.

தெருக்கூத்து நிகழ்ச்சி முடிந்ததும் அக்காள்- தங்கை இருவரும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன்பு படுத்து தூங்கினார்கள்.

நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம மனிதர்கள் ராமலிங்கம் வீட்டுக்கு வந்தனர். அங்கு வீட்டு முன்பு தூங்கி கொண்டிருந்த வள்ளி, தமிழரசி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறிக்க முயன்றனர்.

திடுக்கிட்டு எழுந்த அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் உருட்டு கட்டையால் அக்காள்- தங்கையை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இவைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த வள்ளி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பண்ருட்டி போலீசில் ராமலிங்கம் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவேலும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் வாசலில் மோப்பம் பிடித்து விட்டு வயல் வழியாக மேல்குமாரங்கலம் பாதை வரை ஓடி நின்று விட்டது.

அக்காள்-தங்கையை தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News