செய்திகள்

வருவாய்த்துறையினர் மோதல்: 2 தாசில்தார்கள் சஸ்பெண்டு - கலெக்டர் அதிரடி

Published On 2017-07-07 13:02 IST   |   Update On 2017-07-07 13:02:00 IST
வருவாய்த்துறையினர் மோதலில் தாசில்தார்கள் 2 பேரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் அலுவலர் சங்கத்தினர் இரு தரப்பினராக உள்ளனர். இதில் ஒரு பிரிவினர் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் என்றும், மற்றொரு பிரிவினர் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (விடியல்) என்றும் செயல்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையைச் சேர்ந்த இரு சங்கத்தினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த மோதலால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தாக்குதல் குறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்டதாக வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தை (விடியல்) சேர்ந்த தாசில்தார்கள் பாலாஜி, பாலகுரு ஆகிய 2 பேரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் மலர்விழி அதிரடி உத்தர விட்டுள்ளார்.

இதற்கிடையே மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரியும், பொய் வழக்கை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையினரின் இந்த போராட்டத்தால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.

Similar News