செய்திகள்

புதுவையில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது: நாராயணசாமி திட்டவட்டம்

Published On 2017-07-06 05:33 GMT   |   Update On 2017-07-06 05:33 GMT
புதுவையில் பாரதிய ஜனதாவினர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் எதுவும் நிறைவேறாது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

நியமன எம்.எல்.ஏ.க்கள் வி‌ஷயத்தில் நிதானமுடனேயே நாங்கள் செயல்பட்டோம். இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரையின்படிதான் நியமிக்க வேண்டும் என்பது காங்கிரசின் நிலைப்பாடு ஆகும். ஆனால் கவர்னர் கிரண்பேடி இதில் நேர்மாறாக செயல்பட்டுள்ளார்.

புதுவை கவர்னர் மாளிகை பாரதிய ஜனதா அலுவலகமாக செயல்படுகிறது. நியமன எம்.எல்.ஏ. பிரச்சனையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுக்கும், கட்சித்தலைமை எடுக்கும் முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், ஜனாதிபதிக்கும் புகார் தெரிவித்துள்ளேன்.


அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பா. ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பாரதிய ஜனதாவின் இந்த செயல்பாட்டை மக்கள் எப்போதும் மறந்துவிடமாட்டார்கள்.

அதுபோல் புதுவையிலும் பா. ஜனதாவினர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக நியமித்துள்ளனர். ஆனால் புதுவையில் ஒதுபோதும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வர முடியாது. அவர்களுடைய எண்ணம் எதுவும் நிறைவேறாது. பா. ஜனதாவின் பகல் கனவு பலிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News