சேலையூரில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிப்பு
வேளச்சேரி:
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அகரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரது மனைவி பிருந்தா (35). இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.
நேற்று காலை இவரது கணவர் பாஸ்கர் வேலைக்கு சென்று விட்டார். பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த மர்மநபர் அழைப்பு மணியை அழுத்தினார்.
உடனே அவர் கதவை திறந்தார். அவரிடம் குடியிருப்பின் தரை தளத்தில் குழந்தைகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. எனவே உங்களை அழைத்து வரச் சொன்னார்கள் என்று கூறினான்.
அப்போது திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி உள்பட 13 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.