மானாமதுரையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை: அழுகிய நிலையில் உடல் மீட்பு
மானாமதுரை:
மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே வசித்து வந்தவர் கதிரேசன் (வயது 33). ஆட்டோ டிரைவரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்னர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சி னை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட சாந்தி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் விரத்தியுடன் காணப்பட்ட கதிரேசன் சவாரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வீடு பூட்டியே கிடந்தது.
இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் மானாமதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது கதிரேசன் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி பிரிந்து சென்ற காரணத்தால் வெறுப்படைந்த கதிரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.