காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பிளஸ்-1 மாணவி தற்கொலை
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே செட்டிகுழி பள்ளத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி விஜி. இவர் நேற்று மாலை உடையார்பாளையம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் பழனிவேல் 11 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நான் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மணிகண்டன் என்ற மகனும் மஞ்சுளா (வயது 15) என்ற மகளும் உள்ளனர்.
மஞ்சுளா ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந் நிலையில் அதே தெருவில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மணிகண்டன் என்பவருக்கும் மஞ்சுளாவிற்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர். இதற்கு 2 குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் மஞ்சுளாவிடம் சென்று என் சாவுக்கு நீயும் உன் குடும்பத்தினர் தான் காரணம் என எழுதி வைத்து இருப்பதாக கூறி மிரட்டினார். அன்று முதல் என் மகள் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை நான் வீட்டில் இருந்தேன். அப்போது மஞ்சுளா குளிப்பதாக கூறி சென்றார். பின்னர் அவரது அலரல் சத்தம் கேட்டு உள்ள சென்றேன்.
அப்போது மஞ்சுளா தனக்கு தானே மண்எண்ணெய் ஊற்றி தீ குளித்தது தெரிய வந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றேன். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். ஆனால் செல்லும் வழியில் மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.