செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

Published On 2017-06-19 08:44 IST   |   Update On 2017-06-19 08:44:00 IST
இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், பல கட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால், இதனை எல்லாம் தமிழக அரசு முக்கிய பிரச்சினையாக கருதவில்லை என்பது வேதனைக்குரியது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியபோது 700 ரூபாய் ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்குவதற்கு கையொப்பம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை.



இதுமிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும், மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. இதனை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டமன்றத் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News