செய்திகள்

காரைக்குடி அருகே துப்பாக்கியுடன் காரில் வந்த 5 பேர் சிக்கினர்: போலீசார் தீவிர விசாரணை

Published On 2017-06-15 14:01 IST   |   Update On 2017-06-15 14:01:00 IST
காரைக்குடி அருகே துப்பாக்கியுடன் காரில் 5 பேர் பிடிபட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

துப்பாக்கியுடன் காரில் வந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியை அடுத்த செட்டிநாடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட நேமத்தான் பட்டியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.

இங்கு அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்வது வழக்கம். இன்று அதிகாலையும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 5 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்தது போலீஸ் சோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, துப்பாக்கி வைத்திருந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் கம்பர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது38) என தெரியவந்தது.

அவர் அங்குள்ள ஒரு வங்கியில் காவல் பணி செய்வதாகவும், துப்பாக்கியை சர்வீஸ் செய்வதற்காக மதுரை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் மதுரை செல்வதற்கு வேறு வழி இருக்கும்போது இந்த பாதையில் ஏன் வந்தீர்கள்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கியுடன் வந்தவர்கள் வேட்டையாடும் நோக்கத்தில் வந்திருக்கலாம்? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துப்பாக்கியுடன் 5 பேர் பிடிபட்ட சம்பவம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News