செய்திகள்

பொன்னேரியில் வண்டல் மண் எடுப்பதற்கான சிறப்பு முகாம்

Published On 2017-06-14 17:17 IST   |   Update On 2017-06-14 17:18:00 IST
பொன்னேரியில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற ஏதுவாக, அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உடையார் பாளையம் வட்டம், பிச்சனூர், குருவாலப்பர்கோவில், உட்கோட்டை மற்றும் ஆமணக்கந்தோண்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பொன்னேரியில் 4,86,150 கனமீட்டர் அளவிற்கு வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்வதற்கு அறிவிப்பு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி வண்டல் மண் எடுத்துக்கொள்ள 20 நாட்களுக்கு மிகாமல் அனுமதி வழங்கப்படும். 1 ஏக்கர் விவசாய புன்செய் நிலங்களுக்கு 90 கனமீட்டரும், நன்செய் நிலங்களுக்கு 75 கனமீட்டரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். சொந்த வீட்டு உபயோக பணிகளுக்கு 30 கனமீட்டர் மண் எடுக்க அனுமதியும், மண்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு 60 கனமீட்டர் மண் எடுக்க அனுமதியும் வழங்கப்படும். பொதுமக்கள் மண் எடுத்துக் கொள்ள கொண்டுவரும் வாகனங்களுக்கு பொதுப்ப ணித்துறையின் மூலம் மண் ஏற்றிவிடப்படும். அதற்கான தொகை ரூ.35.20 பைசா 1 கன மீட்டருக்கு ஏற்றுக்கூலியாக செலுத்தவேண்டும்.

மேற்படி பொன்னேரியில் அதிக அளவில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற ஏதுவாக, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் தலைமையிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் சிறப்பு முகாமானது நாளை 15-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆமணக்கந்தோண்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதுசமயம் பொதுமக்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெற மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News