அரியலூர் அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்:
அரியலூர்-ராவுத்தன் பட்டி சாலையில் புதிதாக அமையவுள்ள மதுபான கடை மற்றும் மதுபான கூடத்திற்கு அனுமதியளித்ததை கண்டித்து கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பகுதியில் டாஸ்மாக் அமைப்பதை அறிந்த பொதுமக்கள் இந்த கடையை திறக்ககூடாது என வலியுறுத்தி கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் இப்பகுதியில் டாஸ்மாக் அமைக்கபடாது என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
ஏற்கனவே கல்லங்குறிச்சி சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கடை அமைந்துள்ள நிலையில் மீண்டும் அரியலூர் பகுதியில் டாஸ்மாக் அமைப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் அமையவுள்ள இடம் அருகிலே திருமண மண்டபம் மற்றும் பைபாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இப்பகுதி பெண்கள் கூறுகையில் இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த சாலைகள் வழியாக தான் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் செல்கின்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் அமைந்தால் இரவு நேரங்களில் எங்களுக்கு பாதுகாப்பில்லை எனவும் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கும் எனவும் இப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டினார்.
எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் அமைக்க கூடாது என இப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.