செய்திகள்

கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2017-05-29 17:26 GMT   |   Update On 2017-05-29 17:26 GMT
வயலுக்கு வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைத்து கண்மாய்களிலும் வண்டல் மணல் எடுத்து தங்களது விளை நிலங்களில் இட்டு மண்வளத்தை பெருக்குவதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்த வட்டாரத்தில் தங்கள் வயல்களுக்கு அருகில் உள்ள கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விரும்பும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களிடம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தங்களது விண்ணப்பங்களை சிட்டா அடங்கலுடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். தனியார் பட்டா நிலங்களில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றிய இடங்களில் கண்மாய் வண்டல் மண் இடுவதால் நிலத்தின் வளம் அதிகரிக்கப்படுகிறது.

நஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர்(25 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும், புஞ்சை நிலங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர்(30 டிராக்டர் லோடு ஒரு ஏக்கருக்கு) என்கிற அளவிலும் வண்டல் மண் எடுக்கலாம். எனவே, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வயலுக்கு தேவைப்படும் வண்டல் மண்ணை இட்டு மண்வளம் அதிகரித்து விளைச்சலை பெருக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News