மயிலாப்பூரில் வாலிபர்கள் ‘பைக்’ ரேசில் பெண் பலி
திருவான்மியூர்:
சென்னையில் மெரினா கடற்கரை சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் வார விடுமுறை நாட்களில் பைக்ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பையும் மீறி பைக் ரேஸ் அரங்கேறி வருகின்றன. பைக் ரேசால் அப்பாவி பொதுமக்கள் உயிர் பலி ஆவது தொடர்கதை ஆகி வருகிறது.
மயிலாப்பூரில் நேற்று இரவு வாலிபர்கள் நடத்திய பைக்ரேசில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாப்பூர், அடையாறு மேம்பாலத்தில் இருந்து பாரிமுனை வரை நேற்று இரவு வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபட்டனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்தன.
அப்போது, மயிலாப்பூர் மந்தைவெளி சாலையில் அதே பகுதியை சேர்ந்த மீனா, யசோதா ஆகியோர் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மீனா, யசோதா மீது பயங்கரமாக மோதியது. இருவரும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 வாலிபர்களும் சறுக்கியபடி கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். யசோதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பைக்ரேசில் ஈடுபட்ட 2 வாலிபர்களும் ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது இஸ்மாயில், பிரபு என்பது தெரிந்தது.
படுகாயம் அடைந்த அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் 2 பேரையும் அடையாறு போக்குவரத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாப்பூரில் இருந்து நேற்று 2 பிரிவாக பைக் ரேஸ் நடந்து உள்ளது. ஒரு பிரிவினர் அடையாறு மேம்பாலத்தில் இருந்து பாரிமுனை வரையிலும், மற் றொரு தரப்பினர் மெரினா சாலை வழியாக ஜெமினி பாலம் வரையிலும் சென்று உள்ளனர். விபத்தில் சிக்கிய மீனாவும், யசோதாவும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு நடந்து சென்று உள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் மோதி மீனா பலியாகி விட்டார்.
பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் மீது போலீசார் கடுமையான சட்டப்பிரிவு களில் நடவடிக்கை எடுக் காததே இது போன்ற தொடர் சம்பவம் நடைபெற காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து பொது மக்கள் கூறும்போது, “பைக் ரேசில் ஈடுபடும் வாலிபர்கள் மீது சாதாரண பிரிவுகளிலேயே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்கள் குறைந்த அபராதத் தொகையை கட்டிவிட்டு மீண்டும் ரேசை தொடங்கி விடுகின்றனர். பொதுமக்கள் உயிரோடு விளையாடும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.