செய்திகள்

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உள்நாட்டு போரை உருவாக்குகிறது: டி.ராஜா குற்றச்சாட்டு

Published On 2017-05-29 08:43 IST   |   Update On 2017-05-29 08:43:00 IST
மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உள்நாட்டு போரை உருவாக்குகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டினார்.
ஆலந்தூர் :

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்து உள்ள தடை உத்தரவை திரும்ப பெறவேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களுக்கு கிடைத்து உள்ள அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க கூடிய உத்தரவு.

சமூக வாழ்க்கையில் உள்நாட்டு போர் என்ற கலவர சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. தோல் தொழில்களில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது ஒரு தலைபட்சமான மோசமான முடிவாகும். மத்திய அரசு உத்தரவை திரும்ப பெறாமல் உறுதியாக இருந்தால் நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்படும் என்பதை மோடி அரசு உணரவேண்டும்.



இதை மாநில அரசுகள் கண்டித்து உள்ளன. மக்கள் எதை சாப்பிடவேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போடமுடியாது. 3 ஆண்டுகளில் இந்திய அரசியல் சட்டம் தாக்கப்படுகின்றன. ஜனநாயகம் சிறுமைப்படுத்தப்படுகிறது.

இந்துத்துவா, மதவெறி தத்துவத்தை மக்கள் மீது திணிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் ஒரு கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.

இந்தியா ஜனநாயக நாடு, பாரதீய ஜனதா கட்சியிடம் வெளிப்படை தன்மை இல்லை. மதசார்பற்ற ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ள வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி என்ன செய்ய உள்ளது? என்பதை பார்த்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News