செய்திகள்

கேளம்பாக்கம் அருகே வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது

Published On 2017-05-27 12:24 IST   |   Update On 2017-05-27 12:24:00 IST
கேளம்பாக்கம் அருகே வெடிகுண்டுகளுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் இருவர் மட்டும் போலீசில் பிடிபட்டனர். மற்ற இருவர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட இருவரிடமும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை மேற் கொண்டனர்.

அதில் கஞ்சா பொட்டலங்களும், டிபன்பாக்ஸ் ஒன்றில் 3 நாட்டு வெடி குண்டுகளும் இருந்தது. விசாரணையில் ஓட்டேரி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட நெடுங்குன்றத்தைச் சேர்ந்த ஆனந்த பார்த்திபன், ஊரபாக்கத்தைச் சேர்ந்த தீபக்ராஜ் என்பதும் தெரிய வந்தது.

இருவர் மீதும் கொலை வழக்குகள் இருப்பதும், சில நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

ஆனந்த பார்த்திபனை அவரது எதிரிகள் கொலை செய்ய சுற்றி வருவதை அறிந்து இப்பகுதியில் தலைமறைவாக இருப்பதும் தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் இப்பகுதியில் யாரையாவது கொலை செய்ய நாட்டு வெடி குண்டுகளுடன் சுற்றியுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் இருந்து தப்பி ஓடிய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News