திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சந்தியா (வயது 22).திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள இவருக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் 5பவுன் தங்க சங்கிலி போட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு சந்தியா கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு, சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டைக்கு மொபட்டில் சென்றார். பழைய கந்தர்வக்கோட்டை- மாதா கோட்டை இடையே செல்லும் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் , சந்தியாவின் மொபட் மீது மோதினர். இதில் சந்தியா மொபட்டில் இருந்து தவறி விழுந்தார்.
இதையடுத்து 2பேரும் கத்தியை காட்டி மிரட்டி சந்தியா அணிந்திருந்த 5பவுன் தங்கசெயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து சந்தியா கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். பெண் போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.