செய்திகள்

பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்ததால் தொழிலாளி பலி

Published On 2017-05-26 15:26 IST   |   Update On 2017-05-26 15:46:00 IST
சோழிங்கநல்லூரில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:

சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி இணைப்பு சாலை அருகே பள்ளிக்கூட தெருவில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது.

சுமார் 20 அடி ஆழத்தில் இந்த பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்காக அருகே பெரிய என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

இன்று காலை சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது என்ஜினின் அதிர்வால் திடீரென பள்ளத்தில் மண் சரிந்தது.

இதில் உள்ளே நின்று கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது மணல் விழுந்து அமுக்கியது. அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அவர்களை மீட்க முயன்றனர். இதற்குள் அருகே இருந்த இரும்பு சாரங்களும் அவர்கள் மீது விழுந்தது.

தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் மற்றும் சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

தொழிலாளர்கள் புதைந்து இருந்த இடத்தின் மேல் பகுதியில் இரும்பு சாரம் கிடந்ததால் உடனடியாக அவர்களை மீட்க முடிய வில்லை. இதற்குள் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடியபடி மற்றொருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பலியான தொழிலாளி வந்தவாசி கீழ்புதூரைச் சேர்ந்த சுப்பிரமணி என்று தெரிய வந்துள்ளது.

Similar News