செய்திகள்

காரைக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக 7-வது நாளாக பெண்கள் போராட்டம்

Published On 2017-05-25 11:48 GMT   |   Update On 2017-05-25 11:49 GMT
காரைக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராக 7-வது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள மித்ராவயலில் குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த 19-ந்தேதி முதல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை நடத்தும் பெண்கள் மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்தும் கும்மியடித்தும் ஒப்பாரி பாடல் பாடியும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெண்கள் நடத்தும் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மாதர் சங்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராம பெண்களும் இதில் பங்கேற்றனர்.

நேற்று 6-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான ராமசாமி பங்கேற்றார்.

டாஸ்மாக் கடையை எதிர்த்து நடத்தும் போராட்டத்துக்கு என்னுடைய முழு ஆதரவு உண்டு. இதுதொடர்பாக முதல்வரையும், கலெக்டரையும் சந்தித்து கோரிக்கை வைப்பேன். அதிகாரிகள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

காரைக்குடியை மதுக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

7-வது நாளாக இன்றும் மித்ராவயலில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு கடை முன்பு தூங்கிய பெண்கள் இன்று மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். டாஸ்மாக் கடையை அகற்றும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் தொடங்கி ஒரு வாரம் ஆகியும் அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் காரைக்குடி அருகே உள்ள சிறுவயலில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக கடை திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News