செய்திகள்

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை பிரதமர் திறந்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன்: தம்பித்துரை

Published On 2017-05-25 12:17 IST   |   Update On 2017-05-25 12:17:00 IST
சட்டசபையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. அவர் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. தண்டனையும் தரவில்லை. இது எல்லோரும் அறிந்தது.

ஜெயலலிதா 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர். அவர் மக்களின் தலைவி. எனவே சட்டசபையில் அவரது படத்தை திறப்பதை வரவேற்கிறேன். அதுவும் பிரதமர் திறந்து வைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு முடிந்துள்ளது. இந்த ஆட்சி சரியில்லை என்றும் இந்த ஆட்சியை தமிழக மக்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். எப்படியாவது முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. அதனால் இப்படி பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் வரவேற்கிறார்கள். எந்த நேரத்திலும் முறையான தேர்தல் நடந்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வே வெற்றி பெறும்.


உள்ளாட்சி தேர்தல் தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அவர் சில மாதங்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டியதுதானே?

அ.தி.மு.க. என்றுமே ஒன்றுதான். நாங்கள் இரு அணி சகோதரர்களாக இருக்கிறோம். சகோதரத்துடனும், நட்புடனும் எங்களை வளர்த்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. இரு அணிகளும் கண்டிப்பாக இணையும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இரு அணிகளும் கொண்டாடுவதில் எந்த தவறும் இல்லை. எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்ற கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தலைவர். அவரது நூற்றாண்டு விழாவை தி.மு.க.வும் கூட கொண்டாடலாம்.

பிரதமரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான் மற்றும் தலைமை செயலாளர் இல்லாமல் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மக்கள் நலனுக்காகவும், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனை பற்றியும் பேசி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News