செய்திகள்

பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., சகோதரர் உள்பட 5 பேர் விடுதலை

Published On 2017-05-24 15:23 IST   |   Update On 2017-05-24 15:23:00 IST
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்எல்ஏ ராஜநாயகம் உள்பட 5 பேரையும் விடுதலை செய்து அறந்தாங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ளது பரமந்துரை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் முத்துவேல்.

இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு பிரச்சனை தொடர்பாக முத்துவேல் ஆவுடையார்கோவிலில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது முத்துவேலுவுக்கு ஆதரவாக அப்போதைய ஒன்றிய செயலாளரும், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான ராஜநாயகம், அவரது சகோதரரும், ஒன்றிய கவுன்சிலருமான நரேந்திரஜோதி, சேதுராமன், பிலிக்குட்டி, சாத்தக்குடி ராசு ஆகியோர் ஆவுடையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த ராஜநாயகம் தரப்பினருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மீனாம்பிகை தன்னை ராஜ நாயகம் தரப்பினர் தாக்கியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் அளித்தார்.

அதன்பேரில் ராஜநாயகம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை அறந்தாங்கி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், தற்போதும் ராஜநாயகம் இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகி வந்தார்.

இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா கலையரசி, வழக்கில் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் அளிக்கப்படாததாலும், குற்றம் சரியாக நிரூபிக்கப்படாததாலும் ராஜநாயகம் உள்பட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Similar News