செய்திகள்

காரைக்குடி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக 4-வது நாளாக பெண்கள் போராட்டம்

Published On 2017-05-22 08:39 GMT   |   Update On 2017-05-22 08:39 GMT
காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி:

காரைக்குடி கழனி வாசல் அருகே உள்ள உ.சிறு வயல் பகுதியில் குடியிருப்புகளுக்கிடையே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்துவோர் அப்பகுதியில் பிரச்சினை செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் நடமாட முடியவில்லை.

இதையடுத்து டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

உ.சிறுவயலிலும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமானோர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-வது நாளான நேற்று கடை முன்பு திரண்ட பெண்கள் கடையை திறக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டதோடு, பாரில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கடை முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

4-வது நாளாக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை மீறி எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் நாங்கள் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். எனவே டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். இதுகுறித்து இன்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News