பொன்னமராவதி அருகே ஆசிரியையிடம் ரூ.2½ லட்சம் கொள்ளை
பொன்னமராவதி:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் உஷாராணி (வயது30). இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது கணவர் சுபக்கினுடன் பொன்னமராவதி மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ 2.50 லட்சம் கடன் பெற்று, தனது பைக்கின் இருக்கையின் கீழ் உள்ள பகுதியில் வைத்துள்ளார். வங்கியிலிருந்து புதுப்பட்டி சென்ற உஷாராணி அங்குள்ள குளிர்பானக்கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தை திறந்து பார்த்தபோது பணம் வைத்திருந்த பை கீழே விழுந்து கிடந்துள்ளது.
பூட்டிவைத்திருந்த பை விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பேக்கை திறந்து பார்த்த போது அதிலிருந்த ரூ.2.50 லட்சத்தை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் உஷாராணி புகார் அளித்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.