செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Published On 2017-05-20 23:06 IST   |   Update On 2017-05-20 23:06:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை உடனே மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அன்னவாசல் அருகே மழவராயன்பட்டியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி அக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மூடாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதே போல வேலாடிப்பட்டி, நாவினிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென கந்தர்வக் கோட்டையிலும், அரிமளம், கடியாப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டுமென அரிமளத்திலும், சின்னான் கோன்விடுதியில் உள்ள கடையை மூடக்கோரி கறம்பக்குடியிலும், பாக்குடியில் புதிதாக கடை திறக்க உள்ளதை கைவிடக்கோரி அறந்தாங்கியிலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறைஅருகே ஆர்.எஸ். மாத்தூர் மற்றும் ஈச்சங்காடு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி பெண்கள் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளிருந்த மதுப்பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் மதுப்பாட்டில்களை சேதப்படுத்தியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து ஆர்.எஸ்.மாத்தூரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், போராட்டம் நடத்திய பெண்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Similar News