செய்திகள்

டாக்டர்கள் ஸ்டிரைக் நீடிப்பு: அரசு ஆஸ்பத்திரியில் 40 ஆபரே‌ஷன்கள் நிறுத்தம்

Published On 2017-05-05 17:25 IST   |   Update On 2017-05-05 17:25:00 IST
டாக்டர்கள் ஸ்டிரைக் நீடிப்பதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசரமில்லாத 40 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு:

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெற வேண்டிய சுமார் 2000 ஆப ரே‌ஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் மட்டுமே 2000 ஆபரே‌ஷன்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிலை உள்ளது. டாக்டர்கள் பணிக்கு வராததால் பெண்கள், முதியவர்கள், சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குழந்தை பிரசவ ஆபரேஷன், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை, மூளம், ஹெர்னியா, டான்சில், குழந்தைகளுக்கான நோய்கள் சிகிச்சை போன்றவை நடைபெறவில்லை.

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் போராட்டம் நீடித்ததால் இன்றும் சிகிச்சை அளிப்பது பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வில்லை. அவசரமான சிகிச்சையை மட்டும் அவர்கள் மேற்கொண்டனர். இதனால் புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை பார்க்க முடிந்தது.

மேலும் டாக்டர்கள் ஆபரே‌ஷன்கள் செய்யாமலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவசரமில்லாத ஆபரே‌ஷன்களை அவர்கள் செய்யவில்லை. இதனாலும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரபிரபு கூறும் போது, ‘‘எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 3-ந் தேதி முதல் அவசரமில்லாத ஆபரே‌ஷன்களை நாங்கள் செய்யவில்லை.

அந்த வகையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசரமில்லாத 40 ஆபரேஷன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமர்ஜென்சி ஆபரே‌ஷன்களை டாக்டர்களை கொண்டு செய்து வருகிறோம்’’ என்றார்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், காயங்களுக்கு கட்டு போடுதல், ஊசி போடுதல் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் கல்லூரிகளில் இருந்து பயிற்சி நர்சுகள் இன்று காலை வர வழைக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர். அவர்கள் நோயாளிகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து வருகிறார்கள். தனியார் கல்லூரியில் இருந்து பயிற்சி நர்சுகள் வரவழைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள், டாக்டர்களிடம் கேட்டபோது எதுவும் கூற மறுத்து விட்டனர்.

Similar News