செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

Published On 2017-04-25 17:00 GMT   |   Update On 2017-04-25 17:00 GMT
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தங்களது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு:

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ந்தேதி இந்த தர்ணா போராட்டம் தொடங்கியது. இதில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்றும் 13-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.  

Similar News