செய்திகள்

அரச்சலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: 50 வீடுகள் சேதம் - மின் கம்பங்கள் முறிந்து நாசம்

Published On 2017-04-17 16:31 IST   |   Update On 2017-04-17 16:31:00 IST
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் 50 வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
அரச்சலூர்:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. மாலை 6 மணி வரை வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது.

நேற்றும் இதேபோல் வெயில் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென வானில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தன. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.

அரச்சலூரிலும் நேற்று பகல் வெயில் சுட்டெரித்தது மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் ஐஸ் கட்டி மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றும் சேர்ந்து அடித்ததால் அரச்சலூர் பகுதி மக்கள் பீதி அடைந்தனர். பொதுமக்கள் மீது ஐஸ்கட்டிகள் விழுவது போல் பெரிய.. பெரிய மழை துளிகள் விழுந்தது.

அரச்சலூர் அடுத்த வினோபா நகர் பகுதியில் சுழற்றி..சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் 50 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. இதில் 20 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் மிகவும் தவித்தனர். நேற்று முழுவதும் விடிய-விடிய தூக்கம் இல்லாமலும் தவித்தனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள 15 மின்கம்பங்கள் அடியோடு முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது. அதிர்ஷ்டவசமாக யார் மீதும் மின் கம்பங்கள் விழவில்லை.

இதேபோல் அரச்சலூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரங்களும் முறிந்து விழுந்தது. ஒரே நாளில் அதுவும் 30 நிமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அரச்சலூர் பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர். மீட்பு பணிகள் இன்று துரிதமாக நடந்து வருகிறது.

Similar News