ஸ்ரீமுஷ்ணம் அருகே வன ஊழியர் கழுத்து அறுத்து கொலை
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது சமுத்திரப்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக கொண்ட சமுத்திரம் வனக் காட்டில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். மாலை வீட்டில் இருந்த வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
இரவு 9 மணியளவில் ஆலிஷ்பேட்டை பகுதியில் கணேசன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் முகம் அடையாளம் தெரியாமல் இருக்க சிதைக்கப்பட்டு இருந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
கணேசனை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட கணேசனுக்கு மகாதேவி (43) என்ற மனைவியும் சதீஷ் (28), வீரமணி (26) கபிலரசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
வன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.