ஆடு மேய்த்த பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்: குடிபோதையில் வந்த 4 பேர் கைது
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள ஆலவிளாம்பட்டியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி அடைக்கம்மாள் (வயது60). இருவரும் அழகர் (30) என்பவருடன் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் வந்தது. பாலத்தில் கார் சென்றபோது ஆடுகளை ஒதுக்கி விடாததால் ஆத்திரம் அடைந்த காரில் வந்த வாலிபர்கள் ஆடு மேய்க்கும் பணியில் இருந்த 3 பேரையும் திட்டினார்கள். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அடைக்கம்மாள் உள்பட 3 பேரையும் தாக்கிவிட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அடைக்கம்மாளின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, தலைமை காவலர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளுக்கும், போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலம் கார் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் சிவகங்கை அருகே அந்த கார் மடக்கி பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 6 பேரில் இருவர் தப்பி சென்றுவிட்டனர். மற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாகவும், தாக்குதலில் ஈடுபட்டதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் பெயர் சரத்குமார் (25), பார்த்திபன் (22), செல்லமணி (28), சங்கர் (27) என தெரியவந்தது. தப்பி சென்ற பில்லப்பன், சுடர்மணி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.