செய்திகள்

கோபி பகுதியில் வரலாறு காணாத வறட்சி: பனை மரங்கள் காய்ந்தது - தரிசாக மாறிய நிலங்கள்

Published On 2017-04-13 17:44 IST   |   Update On 2017-04-13 17:44:00 IST
கோபி பகுதியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பனை மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
கோபி:

கோபி பகுதியில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 24,750 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்தானது மிகவும் குறைந்து விட்டது.

இதனால் இதை நம்பி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்தி வந்தனர். தண்ணீர் இல்லாத காரணத்தினால் இரு வாய்க்கால்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

பயிரிடப்பட்டுள்ள சில பயிர்களுக்கு வெளியில் இருந்து லாரி டேங்க் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து இதற்கு ஊற்றி விவசாயத்தை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தடப்பள்ளி பாசனபகுதியில் உள்ள பனை மரங்களே காய்ந்து போய் இருக்கின்ற கொடுமையானது நீடித்துள்ளது.

பொதுவாக பனை மரங்கள் எந்த காலத்திலும் வறண்டு போகாது. ஆனால் இந்தாண்டு அடிக்கும் வெயிலினாலும், மழை பெய்யாததாலும் பனை மரங்கள் காய்ந்து போய் நிற்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களும், காய்ந்து போய் உள்ளன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறும்போது, விவசாயத்தை நம்பிதான் பிழைத்து வருகிறோம். இந்த ஆண்டு மழை பெய்யாத காரணத்தினால் இந்த கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்”, என்றனர்,

Similar News