செய்திகள்

சென்னை தீவுத் திடலில், 5-ந்தேதி வணிகர் சங்க பேரவை மாநாடு: த.வெள்ளையன் அறிவிப்பு

Published On 2017-04-12 07:38 GMT   |   Update On 2017-04-12 07:38 GMT
சென்னை தீவுத் திடலில் மே 5-ந்தேதி வணிகர் சங்க பேரவை மாநாடு நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் பெரம்பூரில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ், மாவட்ட தலைவர்கள் மணலி சண்முகம், வியாசை மணி, ப.தேவராஜ், ஷேக்அகமது, துரை மாணிக்கம், பம்மல் இம்மானுவேல், ஜெயசீலன், இளைஞர் அணி தலைவர் சுந்தர், சி.எல்.செல்வம், சி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந்தேதி வணிகர் சங்க பேரவை மாநில மாநாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மே 5-ந்தேதி சென்னை தீவுத்திடலில் மாநில மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டினை அகில இந்திய தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா தொடங்கி வைக்கிறார். பழ.நெடுமாறன் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் ஆன்லைன் வர்த்தகத்தை தடுப்பது குறித்தும் சில்லரை வணிகத்தை பாதுகாப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த மாநாடு 34-வது வருடமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு ‘வணிகர் உரிமை பிரகடன மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாநாட்டையொட்டி மே 5-ந்தேதி கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News