செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் சோதனை நடத்தப்பட்டது ஏன்?

Published On 2017-04-12 10:40 IST   |   Update On 2017-04-12 10:40:00 IST
அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்த முழு விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று வெளியிட உள்ளனர்.
புதுக்கோட்டை:

பல கோடி அளவிலான பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. முன்னதாக பணப்பட்டு வாடாவை தடுக்கவும், இதுவரை பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பதை அறியவும் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

இதில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திரு வேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எப். படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது முறையாக சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் குழு, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணி நேரம் குவாரியை அங்குலம் அங்குலமாக கணக்கெடுத்து சோதனை நடத்தினர். எந்த அளவுக்கு கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு நடத்திய குழுவினர், குவாரி வர்த்தகம் பற்றிய ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் குவாரியில் உள்ள ஒரு அறைக்கு சீல் வைக்கப்பட்டு சி.ஆர்.பி.எப். படையின் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த சோதனையால் 70-க்கும் அதிகமான லாரிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாமல் குவாரி வளாகத்திலேயே நிறுத்தப்பட்டன. இதுபோல் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்துடையான்பட்டி அருகே உள்ள விஜயபாஸ்கரின் கிர‌ஷர் நிறுவனத்திலும் 2-வது முறையாக சோதனை நடந்தது.


திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கும் பகுதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்ற காட்சி.

கல் குவாரியில் சோதனை நடத்திய பின்னணி பற்றி வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

ஆரம்பத்தில் திருவேங்கைவாசல் சிவன் கோவில் கண்மாய் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தை மட்டுமே விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். பிறகு குறுகிய காலத்திலேயே முத்துடையான்பட்டி, பெருஞ்சுனை, இரும்பாளி வரையிலான சுற்று வட்டார பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் வளைக்கப்பட்டு பெரிய அளவில் குவாரி தொழில் தொடங்கியுள்ளார்.

இடங்களின் உரிமை ஒருவர் பெயரிலும், கல் குவாரி லைசென்ஸ் வேறு ஒருவர் பெயரிலும் உள்ளது. மேலும் திருவேங்கைவாசல் கல் குவாரி அருகில் உள்ள கண்மாயை படிப்படியாக ஆக்கிரமிக்கும் முறைகேடும் நடந்து வருகிறது.

நவீன எந்திரங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டி கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரெடி மிக்ஸ் கான்கிரீட், தார் பிளான்ட், கிர‌ஷர் ஜல்லி, பேவர் பிளாக் கற்கள் ஆகியவை தயாரிப்பில் விதிமீறல் இருக்கிறது. முதல் ரக ஜல்லி ஒரு லோடு ரூ.5 ஆயிரம் என்ற அளவில் தினமும் சராசரியாக 100 லோடு விற்பனை நடத்துவதாகவும், ஆனால் விற்பனை அளவை குறைத்து காட்டும் முறைகேடு நடப்பதாகவும் புகார்கள் உள்ளன.

இவை தொடர்பான துல்லியமான ஆதாரங்களை திரட்டவே, மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இங்கு சோதனை நடவடிக்கைகள் மேலும் சில முறை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சோதனையை முடித்துக் கொண்டு வெளியே வந்த அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை சூட்கேஸ் மற்றும் பைகளில் எடுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் நிருபர்கள் கேட்ட போது, சோதனை தொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றனர்.

Similar News