செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி: மு.க.ஸ்டாலின்-திருமாவளவன் கண்டனம்

Published On 2017-04-11 14:28 GMT   |   Update On 2017-04-11 14:28 GMT
திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. போராட்டம் நடத்திய பெண்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. போலீசார் பெண் ஒருவரை வேகமாக தள்ளி, கையால் வேகமாக அடித்தார், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து உள்ளூர் மக்கள் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

‘போராட்டத்தில் பெண்ணை தாக்கிய டி.எஸ்.பி. மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். தாக்குதலை பார்க்கும்போது, காட்டுமிராண்டி சமூகத்தில் வாழ்கிறோமா? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. புதிய மதுக்கடைகளை திறப்பதை தமிழக முதல்வர் கைவிட வேண்டும்’ என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரும் போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்றது.

Similar News