பழங்குடியின மக்களுக்கு 2 மாதத்தில் சாதி சான்றிதழ்: புதுக்கோட்டை கலெக்டர் ஒப்புதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி குரும்ப இன மக்களுக்கும், இந்து ஆதியன், காடர், நரிக்குறவர், கூடைபின்னும் குறவர், பன்னியாண்டி, காட்டுநாயக்கன் உள்ளிட்ட இன மக்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக எஸ்டி சான்றிதழும் புதிரை வண்ணார் இன மக்களுக்கு எஸ்சி சான்றிதழும் அருந்ததியர் இன மக்களுக்கு எஸ்.சி(ஏ) சான்றிதழும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக இவர்கள் முறையிட்டும் இதுநாள் வரை சான்றிதழ் கிடைக்க வில்லை. இதனால், தங்களது குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கும் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில். மேற்படி மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் அன்புமணவாளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவருமான டில்லி பாபு கண்டன உரையாற்றினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.சின்னத்துரை, மாநிலக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம்உள்பட பலர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தலைவர்கள் சென்றனர். அங்கு ஆட்சியர் இல்லாததால் அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம் மனுவைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு காவல் துறையினரும், அரசு அலுவலர்களும் தலைவர்களிடம் வலியுறுத்தினர். ஆட்சியர் வந்து தங்களுக்கு தக்க பதில் அளிக்காமல் இடத்தை விட்டு நகரமாட்டோம் எனக்கூறி பழங்குடியின மக்களுடன் ஆட்சியர் அலுவலத்திற்குள்ளேயே தலைவர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வெளியூர் சென்று கொண்டிருந்த கலெக்டர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கலெக்டர் அலுவலகம் திரும்பியதோடு தலைவர்களை அழைத்து பேச்சுவாத்தையும் நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், மாவட்டத்தில் 147 கிராமங்களில் வசிக்கும் குரும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று சிறப்பு முகாம்களை நடத்துவது என்றும் மானுடவியல் துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தி இரண்டு மாதத்திற்குள் சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதியளிக்கப்பட்டது.