செய்திகள்

பல்லாவரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பா.ம.க.வினர் சாலை மறியல்: 50 பேர் கைது

Published On 2017-04-05 15:16 IST   |   Update On 2017-04-05 15:16:00 IST
பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் 50 பேரை கைது செய்தனர்.
தாம்பரம்:

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி பல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதனால் இந்த டாஸ்மாக் கடையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனே மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று சாலையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் பொழிச்சலூர் பம்மல் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்ததும் சங்கர் நகர் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News